'தல' அஜித் இருப்பது ஆஸ்திரியாவில்..!

Friday, August 19, 2016

'ஏகே 47 தெரியும். அது என்ன ஏகே 57', ட்ரெண்டிங் யுகம் பற்றித் தெரியாதவர்கள் இப்படித்தான் கேள்விகள் கேட்பார்கள். வாட்ஸப் கன்னியர், காளையர்களிடம் இப்படிக் கேட்டால், ‘இது கூடத் தெரியாதா?’ ரகத்தில் சிரிப்பொன்றை உதிர்ப்பார்கள். காரணம், தல - தளபதியின் ரசிகர்களை வைத்துத்தான் ட்விட்டரும் பேஸ்புக்கும் தமிழ்நாட்டில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது.

எந்த சமூக வலைதளமாக இருந்தாலும், இரண்டு நட்சத்திரங்களைப் பற்றியும் தகவல்களைக் கொட்டிக் குவிப்பார்கள் அவர்களது ரசிகர்கள். ’முடிஞ்சளவுக்கு அள்ளிக்கோ’ என்றளவுக்கு, அதில் ‘டீட்டெய்ல்’ இருக்கும். அந்த வரிசையில், தல அஜித்குமாரின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் தான், தற்போது நெட்டுலகில் ஹாட் டாபிக். 

 

சமீபகாலமாக, ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் உடைத்தபிறகே அஜித் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்படுகிறது. இந்த வழக்கத்தில் இருந்து சற்றும் சிறிதும் பிசகாமல், அவர் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகும்வரை, ‘ஏகே 57’ என்றே அவர் நடிக்கும் புதிய படம் அழைக்கப்படுமாம். (இது ‘தல’ ரசிகர்களின் அன்பான வேண்டுகோள்)

 

புதிய அறிமுகங்களைத் தந்த சத்யஜோதி பிலிம்ஸூம் ‘சிறுத்தை’ சிவாவும் கைகோர்த்திருக்கும் இந்தப் படத்தில், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், கருணாகரன், சாமிநாதன் உட்படப் பலர் நடிக்கிறார்கள். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல், அதிகாரப்பூர்வமற்ற வகையில் கோலிவுட்டை உலா வருகிறது. சர்வதேசப் புலனாய்வு அமைப்பில் பணிபுரிபவராக அஜித் நடிக்கிறார் என்றும், அவரது மனைவியாக காஜல் வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. பவர்பேக் ஆக்‌ஷனுடன் தயாராகும் இந்தப் படத்தின் புகைப்படமோ, பர்ஸ்ட்லுக்கோ, இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், வெளிநாட்டில் உலாவரும் அஜித்தின் புகைப்படம் நெட்டில் வைரலாகி இருக்கிறது. 

 

இதன் மூலமாக, ஐரோப்பியாவிலுள்ள ஆஸ்திரியா நாட்டில் ‘ஏகே 57’ டீம் முகாமிட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அங்குள்ள பத்திரிகையொன்றில், இந்தப் படத்தின்  ஷூட்டிங் பற்றிய தகவல்கள் வெளியானதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகே, ’57வது படத்தில் தல என்ன கெட்டப்பில் நடிக்கிறார்’ என்ற ரசிகர்களின் கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கிறது. செம ஸ்டைலிஷாக படம் தயாராவது தெரிந்ததும், குதூகலிப்பில் இருக்கிறார்கள் ‘தல’ ரசிகர்கள். இந்தச் சூடு அடங்குவதற்குள், ‘ஏகே 58’ படத்தை இயக்குவது யார் என்ற போட்டாபோட்டியும் தொடங்கியிருக்கிறது. 

 

படம் ரிலீஸாகுற வரைக்கும், இனிமே ‘தல’ ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்!

- ஜென்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles