மூன்று வேடங்களில் கார்த்தி  - அசத்தும் ‘காஷ்மோரா’!

Thursday, August 18, 2016

‘ஜோக்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்  தயாரிக்கும் படம் ‘காஷ்மோரா’. மாறுபட்ட பாத்திரங்களில் கார்த்தி நடிக்கும் இப்படத்தில் நாயகிகளாக நயன்தாராவும் ஸ்ரீதிவ்யாவும் நடிக்கின்றனர். முக்கியமான பாத்திரத்தில் விவேக் நடிக்கிறார். இன்னொரு நகைச்சுவை நடிகரும் ‘காஷ்மோரா’ படத்தில் நடிக்கிறார். அவர் யாரு தெரியுமா? நம்ம வடிவேலுதான். 

பொதுவாக, தியேட்டர் ஸ்கீரினில் விவேக் வந்தாலே அரங்கம் குலுங்கும். கூடுதலாக வடிவேலுவும் வந்தால், அதகளத்துக்கு சொல்லவா வேணும். ச்சும்மா.. தியேட்டரே சிரிப்பலையில் குலுங்காதா!

ஏற்கனவே இந்த கூட்டணி ‘மனதை திருடி விட்டாய்’, ‘பட்ஜெட் பத்மநாபன்’ படங்களில் கலக்கியவர்கள் தான். நிற்க, வழக்கமாக ரஜினிக்குப் பிறகு, விஜய் மட்டுமே தான் நடிக்கும் படங்களில் நகைச்சுவையில் அள்ளுவார். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது யார்? வேறு யாரு நம்ம கார்த்தியே தான். அதனால், இந்தப் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்மிருக்காது என்று எதிர்பார்க்கலாம். இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் கோகுல். இவர், ஏற்கனவே ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் மூலம் நம் கவனம் ஈர்த்தவர்தான்! 

தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஹாரர், காமெடி, ஆக்ஷன், பீரியட் என்று பல்வேறு களத்தில் பயணிக்கும் ஒரு கதையாக ‘காஷ்மோரா’ இருக்குமாம். “கார்த்தி மூன்று வெவ்வேறு விதமான வேடங்களில் நடித்துள்ளார். அந்த மூன்று தோற்றங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்படும்” என்கிறது படக்குழு. ‘காஷ்மோரா’விற்காக ஏழு மாதம் எடுத்துக்கொண்டு, 47 தோற்றங்களைத் தேர்வு செய்து, அதில் இருந்து இந்த 3 வேடங்களை இறுதி செய்துள்ளார்  இயக்குநர் கோகுல்.

பீரியட் காட்சிகளை படமாக்க, பல்வேறு இடங்களில் மிக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. படத்தின் முக்கியமான காட்சியில் இடம்பெறும் தர்பாருக்காக, சென்னையில் உள்ள வானகரத்தில் மிக பிரமாண்டமான அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு, அங்கு கார்த்தி மற்றும் துணை நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பல்வேறு களங்களில் பயணிக்கும் இந்தக் கதைக்கு, உயிரோட்டம் தந்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இத்தனை சிறப்புகளை தாங்கி வரும் ‘காஷ்மோரா’, வரும் தீபாவளி அன்று ரசிகர்களின் மனங்களை கொள்ளையடிக்க வருகிறது!

- கிராபியென் பிளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles