நாம் பேசத் தயங்குகிற அரசியல்தான்,  நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது! - இயக்குநர் ராஜுமுருகன்

Saturday, August 13, 2016

‘குக்கூ’ படத்தின் மூலம் பரவலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன். தனது இரண்டாவது படமான ‘ஜோக்கர்’ மூலம், அழுத்தமான அரசியலைப் பதிவு செய்திருக்கிறார். ‘ஆரண்யகாண்டம்’, ‘ஜிகர்தண்டா’ படங்களின் மூலமாக நடிப்பில் முத்திரை பதித்த சோமசுந்தரத்தை, கதையின் நாயகனாக்கி இருக்கிறார். எழுத்தாளர் பவா செல்லதுரை மற்றும் நாடகக் கலைஞர் மு.ராமசாமிக்கு முக்கியப் பாத்திரங்களைத் தந்திருக்கிறார். ஒரு நள்ளிரவில், அவரை விரட்டிப் பிடித்துப் பேசினோம்!

“மக்களிடம் பேச நினைத்த விஷயங்களைத்தான், ’ஜோக்கர்’ படமாக உருவாக்கியிருக்கிறேன். ’மக்களிடம் இருந்தே மக்களிடம் கொடுத்திருக்கேன்’னு சொல்லலாம். நாம் பார்த்து பிரியப்பட்ட மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட, ஒரு எளிய சினிமாதான் ஜோக்கர். 

 

இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதும்போதும் அதைப் படமாக்கியபோதும், அப்படியே இதைக் கொண்டுபோய் மக்களிடம் சேர்க்கணும் என்பது மட்டும்தான், என்னோட மனசுல இருந்தது. அதை நிறைவேற்றிய, இந்தப் படத்தோட தயரிப்பாளர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்!

 

இந்தப் படம் இரண்டு விஷயங்களைப் பேசுது. இந்த சமூக அமைப்புல, ஒரு சாதாரண குடிமகனுடைய குரல் என்னவாக இருக்கு? சுதந்திரம் அடைந்து எழுபது வருடங்களைக் கடந்துவிட்ட பிறகு, இந்தியா எந்த இடத்தை வந்தடைந்திருக்கிறது? என்பதையும் ‘ஜோக்கர்’ படம் பேசுது. அதுவும், சுதந்திர தினத்தையொட்டி படம் வெளியாகி இருப்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

 

சாதாரண மனிதனின் குரல் இந்த சிஸ்டத்துல எந்தளவுக்கு ஒலிக்க முடியும் என்பதற்க்கு பொருத்தமா, மன்னர் மன்னன் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கினேன். அவனுடைய இருப்பு இந்தச் சமூகத்துல என்னவாக இருக்கு என்பதைச் சொல்லியிருக்கேன். அதேபோல, மல்லிகா என்கிற பாத்திரமும் இந்தப் படத்துல முக்கிய கவனத்தைப் பெறும். இந்தியாவுல வாழுற எளிய குடும்பப் பெண்களின் விருப்பம், மனநிலை என்னவாக இருக்கு? அந்தப் பெண்களின் ஆசையை இந்த சமூகம் எந்தளவுக்கு நிறைவேற்றுது? என்பதையும் சுவாரஸ்யமான காட்சிகளின் வழியே காட்டியிருக்கிறேன்.

 

‘ஜோக்கர்’ படத்தை தருமபுரியிலும், அதைச் சுற்றியுள்ள சில கிராமங்கள்லயும் எடுத்திருக்கேன். இந்தக் கதையில் வர்ற மன்னர் மன்னனுடைய ஊராக, பாப்பிரெட்டிபட்டி என்கிற கிராமத்தைக் காட்டியிருக்கேன். உண்மையிலேயே பாப்பிரெட்டிபட்டியைத்தான் அப்படி மாத்திச் சொல்லியிருக்கேன். எட்டு மாதத்துக்கு முன்னாடியே, அந்தப் பகுதியில இருக்கிற ஒரு கிராமத்துல தங்கி, அந்த மனிதர்களோடு பழகி, அவர்களுடைய ஒத்துழைப்பால முழு படப்பிடிப்பும் நடந்தது. அந்தப் பகுதியை சேர்ந்த மனிதர்கள்தான் ‘ஜோக்கர்’ படம் முழுக்க நடிச்சிருக்காங்க. சினிமாவைத் தாண்டிய அனுபவமாக, இதை நான் பார்க்கிறேன்!

 

வாழ்க்கையையும் அரசியலையும், நாம் பிரித்துப் பார்க்கிறோம். அரசியல் பேசத் தயங்கும் ஒரு சூழ்நிலையை, நம்முடைய சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. அரசியல் பேசுவது தவறு என்றும், அரசியல் பேசினால் ஏற்படும் அச்சத்தையும், காலங்காலமாக நம்முடைய மனங்களில் உருவாக்கி வைத்திருக்கிறோம். சினிமாவில் மட்டுமல்ல, அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் அரசியல் பேசுவதை அபத்தமாக நினைக்கிறோம். உண்மையில், நாம் பேசத் தயங்குகிற அரசியல்தான் நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஆனால், தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் பேசிவிட்டு விட்டுவிடுகிறோம். உண்மையில், நம்முடைய பள்ளிகளில் இருந்து அரசியல் பேசுவதைக் கற்றுத்தரணும். இனிவரும் காலங்களில், இதுபோன்ற அரசியல் படங்கள் அதிகமாக வரும். 

 

நம்ம சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற அலட்சியத்தையும் லஞ்சத்தையும், ஜோக்கர் படம் தோலுரிச்சுக் காட்டும். நாம் சக மனுஷனை எந்தளவுக்கு நேசிக்கிறோம். யோசிச்சுப் பாருங்க. நாம பாதிக்கப்படும்போது மட்டுமில்லை. சக மனிதன் பாதிக்கப்பட்டு போராட்டத்துல ஈடுபடும்போது, நாமும் இணையணும். அந்தப் போராட்டத்துல பங்கெடுத்துக்கணும். நேரடியாக இல்லைன்னாலும், மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் அந்தப் போராட்டத்துக்கு உதவணும். நமக்காகப் போராடுகிறவங்களை, ஒரு வேடிக்கைப் பொருளாக பார்க்கிற மனநிலை இன்றைய சமூகத்துல அதிகரித்திருக்கிறதா நினைக்கிறேன். போராட்டங்கள்ல நாமும் பங்கு பெறணும் என்பதை, ஜோக்கர் உங்களுக்கு உணர்த்தும்னு நினைக்கிறேன். இந்தப் படம் மூலமாக, இந்தச் சமூக அமைப்பின் மீது உங்களுக்கு சில கேள்விகள் ஏற்பட்டுச்சுன்னா, அதுதான் எனக்கு பெரிய சந்தோஷம்!” என்றவாறே நம்மைப் பார்த்து புன்னகைத்தார்.

 

இந்த உலகத்திலுள்ள எல்லா விஷயங்களின் பின்னாலும், ஏதோ ஒரு அரசியல் இருக்கிறது. அதைப் பற்றிய சிந்தனையையும், அதனைத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது ராஜூமுருகனின் பேச்சு. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles