இரண்டு மொழிகளில் படம் எடுக்கக் காரணம் கெளதம் தான்! - இயக்குனர் பிரேம் சாய்

Saturday, August 13, 2016

சின்னத்திரை ‘மேடி’ என்ற அழகான அடைமொழிக்குச் சொந்தக்காரர். ஆன்டீஸ்களையும் இளம் பியூட்டீஸ்களையும், தன்னுடைய ஆடம்பரமில்லாத நடிப்பால் வசீகரித்தவர். சின்ன வேடமாக இருந்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு நடித்தவர். மிகவும் எளிமையானவர். சின்னத்திரையில் நடிகராக இருந்த இவர், சினிமாவிலும் வெற்றிகரமாகக் கால் பதித்திருக்கிறார்.

தனது முதல் படத்தையே இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கியிருக்கிறார். ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படம் ரிலீஸான பரபரப்பில் இருந்த பிரேம் சாயைத் தேடிப் பிடித்தோம். சின்னத்திரையில் இருந்து விலகியது முதல்.. நீண்ட இடைவெளிக்குப்பிறகு முதல் படம் வெளியானது வரை, ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசினார். 

 

‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படத்தைப் பற்றி..?

”ஒரு இளைஞன், சென்னைக்கு வேலை தேடி வர்றான். அவனுக்குப் பிடித்த வேலையை செய்யணும்னு ஆசைப்படுறான். ஆனால், அவன் வேற வழியே இல்லாம ஒரு கூரியர் கம்பெனி வேலைக்குப் போறான். அங்க, ஒரு பெண்ணைப் பார்த்து காதல்ல விழறான். அப்புறம், தனக்குக் கிடைச்ச கூரியர் பாய் வேலையை விரும்ப ஆரம்பிக்கிறான். மிச்சத்தை, நீங்க கட்டாயம் தியேட்டர்ல பாருங்க.

 

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களைத் திருப்திப்படுத்த, எந்த அளவிற்கு மெனக்கெட வேண்டியிருந்தது?

நான் ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பிச்சது தமிழுக்குதான். ஆனால், கெளதம் தான் ரெண்டு மொழிகள்லயும் ஸ்க்ரிப்ட் எழுதச் சொன்னார். மொழி பேதம், கலாச்சார பேதங்கள் கண்டிப்பாக இருக்கு. அதுக்காக நிறையா ஒர்க் பண்ண வேண்டியிருந்தது. காமெடி கான்செப்ட் கூட, மொழிக்கு ஏற்ற மாதிரி மாறும். இரண்டு மொழிகள்ல, சீன் பை சீன்  அப்படியே எடுக்க முடியாது. கொஞ்சம் ரிசர்ச் செய்துதான், காட்சியமைக்க வேண்டியிருந்தது. மெனக்கெட்டு செஞ்சு கிடைக்குற வெற்றியிலதான், நமக்கு முழு திருப்தி கிடைக்குது.

 

படம் தாமதமாக வெளியானது உங்களைப் பாதித்ததா? 

‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படம் மட்டும்தான் தாமதமா வெளிவந்திருக்கா? இல்லியே. இதுக்கு முன்னாடி எத்தனையோ தமிழ் படங்கள், ரொம்ப தாமதமாக வெளிவந்திருக்கு தானே. படத்தோட தாமதமான ரிலீஸ், மனசைக் கொஞ்சம் பாதிக்கத்தான் செஞ்சுது. அதே சமயத்துல, நிறைய கத்துக் கொடுத்துச்சுங்கிறதும் உண்மை. எதையுமே பாசிட்டிவாக பார்க்குற பக்குவம், இப்போ எனக்குக் கிடைச்சிருக்கு.

 

படத்தோட ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?

அமேஸிங் ரெஸ்பான்ஸ்ங்க! எங்கெங்கெல்லாம் கைதட்டல் கிடைக்கும்னு நினைச்சேனோ, அங்கெல்லாம் ரசிகர்கள் கை தட்டுனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது.

 

படம் பார்த்துட்டு கௌதம் மேனன் என்ன சொன்னார்?

நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து, படத்தை நிறைய தடவை பார்த்துட்டோம்ங்க. படத்தொகுப்பின்போதே பார்த்துட்டு, ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னார். எனக்கு ரொம்ப எக்ஸைடடா இருந்த.து தெலுங்குல ஒண்ணாதான் பார்த்தோம். தமிழ் படத்தை, அவரு பேமிலியோட பார்த்தார்.

 

இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் பற்றி..?

அவரு இயக்கத்துல நடிச்சது, எனக்கு கிடைச்ச வரம். இது ’ட்ரீம் கம் ட்ரூ’ன்னு சொல்லலாம். என்னோட இந்த ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தோட ஸ்க்ரிப்ட் பற்றி, அவர்கிட்ட நிறையா பேசியிருக்கேன். ஆனால் என்னோட துரதிர்ஷ்டம், படம் வெளிவரும்பொழுது அவர் நம்ம கூட இல்லை.

 

பிரபுதேவாவுடன் பணியாற்றிய அனுபவம்?

நான் சின்னத்திரையில 10 வருஷமா நடிச்சிட்டிருந்தேன். திடீர்னு, வேற ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு ஆசைப்பட்டேன். செட்ல கூட, சின்னச்சின்ன சீன்களை, என் பாணியில எழுதிப் பார்த்தேன். எல்லாருக்கும் படிச்சுக் காட்டுவேன். கேட்டுட்டு, அவங்க பாராட்டவும் செய்வாங்க. இப்படியே கதை எழுதத் தொடங்கினேன். எனக்கு எப்போதும், கிரியேட்டிவ் சைடுல போகணும்னு ரொம்ப ஆசை. அப்போ பிரபுதேவா படம் இயக்கிட்டு இருந்தாரு. அவருக்கு உதவி இயக்குனர் தேவைப்பட்டுச்சு. அப்போதான், நான் அவர்கிட்ட போய் சேர்ந்தேன். ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தை, அவர் இன்னும் பார்க்கலை. புதுசா படம் கமிட்டானதால, பிஸியா இருக்கார். கண்டிப்பா, அவருக்கு நான் இந்தப் படத்தை ஸ்க்ரீன் பண்ணவேன்.

 

அடுத்த படம் எப்போது..?

ரெண்டு ஸ்கிரிப்ட் என்கிட்டே இருக்கு. கூடிய சீக்கிரம் அறிவிப்பேன். இப்போ, கான்செப்ட் பேஸ்டு படம் நிறைய வருது. கமர்ஷியல் சினிமான்னு இல்லாம, இந்த மாதிரி வித்தியாசமான கதைக்களத்தை ரசிகர்கள் ஏத்துக்கறது, திரையுலகத்துக்கு ஒரு ஆரோக்கியமான சூழலைக் கொடுத்திருக்கு.

 

எல்லாம் ஓகே, திரும்பவும் சின்னத்திரையில உங்களை நாங்க பார்க்கலாமா? 

இல்லைங்க! எனக்கு  இயக்கத்துலதான் ஆர்வம் இருக்கு. ரொம்ப பீக்ல இருக்கும்போதுதான், சீரியல்லருந்து வெளியே வந்தேன். இப்ப கூட, நிறைய ஃபேன்ஸ் ‘வீ மிஸ் யூ’ ன்னு சொல்லுறாங்க. நான் எங்கேயும் போகலை. உங்களுக்காகப் படம் இயக்கி கொடுத்திருக்கிறேன்,பாருங்க. என்னோட இந்த மாற்றம், அவங்களுக்கும் ரொம்ப பிடிச்சுருக்கு” என்றவாறே தனது பேச்சை நிறைவு செய்தார் பிரேம் சாய். 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles