தோனி’ சினிமா ரெடி!

Friday, August 12, 2016

சினிமா, அரசியலுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் குழுக்களை உருவாக்கும் வல்லமை கொண்டது கிரிக்கெட். மிகச்சரியாகச் சொன்னால், கிரிக்கெட் என்பது இங்கு இன்னொரு மதம். கிரிக்கெட்டை விளையாடுவது மட்டுமல்ல, அதனை ரசிப்பதும் கூட இங்கு மிகப்பெரிய கவுரவம். உலகம் முழுக்க கிரிக்கெட் ஜாம்பவான்கள் நிறைந்திருந்தாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலருக்கு மட்டுமே கடவுள் அந்தஸ்தைக் கொடுப்பார்கள். அதில் ஒருவர், தற்போது இந்திய கிரிக்கெட்டின் தூணாக விளங்கும் எம்.எஸ். தோனி. 

சச்சின், ராகுல், சவுரவ், அனில் என்று சீனியர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட்டில், தனக்கான இடத்தை நிர்ணயித்துக் கொண்டவர் மகேந்திரசிங் தோனி. ’ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியிலா?’ என்ற ஆச்சர்யத்தைத் தந்தவர். 2007ம் ஆண்டு முதன்முதலாக நடந்த 20 - ட்வெண்டி உலகக்கோப்பையில் வென்று, உலக கிரிக்கெட் ரசிகர்களின் வயிற்றில் அமிலம் சுரக்க வைத்தவர். அதன்பின், தோனி தொட்டதெல்லாம் பொன். 

 

தோனியின் வாழ்க்கை, தன்னம்பிக்கை பேச்சாளர்களுக்கு ஒரு அற்புதமான பேசுபொருள். ’இவரது வாழ்க்கையைச் சினிமாவாக எடுத்தால் என்ன?’ என்று பாலிவுட்டில் யோசிக்காதவர்களே இல்லை. அதனைப் புயல்வேகத்தில் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார் ‘ எ வெட்னஸ்டே’ புகழ் நீரஜ் பாண்டே. இவரது இயக்கத்தில், ‘எம்.எஸ். தோனி - தி அண்டோல்டு ஸ்டோரி’ தயாராகி வருகிறது. இதன் டிரெய்லர் வெளியாகி, ஒரேநாளில் 25 லட்சம் ஹிட்ஸ் அள்ளியிருக்கிறது. ‘படத்துல ஹெலிகாப்டர் ஷாட் இருக்குடா’, ‘ட்ரெஸ்ஸிங் ரூம்ல இருந்து தோனி வர்ற மாதிரியே, சுஷாந்த் நடிச்சிருக்காருப்பா’ என்ற ஆச்சர்ய கமெண்ட்கள் யூடியுபில் நிரம்பி வழிகின்றன.  

 

உயிருடன் இருக்கும்போதே சில தலைவர்களுக்குச் சிலை வைப்பதைப் போல, தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையும் சினிமாவாகி இருக்கிறது. இந்தியாவில் எந்தவொரு பிரபலமும், சுயவரலாற்றில் முழுதாகத் தன்னை வெளிப்படுத்தியதில்லை. ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. சூதாட்டப் புகார், அதனால் இந்திய அணியில் உண்டான தொய்வு, ஐ.பி.எல். கொண்டாட்டம் என்று, தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையோடு பல விஷயங்கள் இணைந்திருக்கின்றன. இதைப்பற்றிய விமர்சனங்கள், இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், இருந்தால் நன்றாக இருக்கும் என்பது சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

 

சிங்கத்தின் பிடரி போன்ற தலைமுடியுடன் இந்திய அணிக்குள் நுழைந்தது முதல், சில நாட்களுக்கு முன்பு தன் செல்ல மகளைக் கொஞ்சியது வரை.. மகேந்திரசிங் தோனியின் ஒவ்வொரு அசைவும் வைரல் தான். அது, இந்த டிரெய்லரின் அதிரிபுதிரி ஹிட்டில் நிரூபணமாகி இருக்கிறது. இந்த வரவேற்பைத் தக்கவைக்கும் வகையில், ‘எம்.எஸ்.தோனி - தி அண்டோல்டு ஸ்டோரி’ அமைய வேண்டும்!

 

- உதய் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles