நல்ல சினிமா உருவாக, நீங்களும் உதவலாமே!

Wednesday, August 10, 2016

தமிழ் சினிமாவை தரம் உயர்த்த, எவ்வளவோ திரைப்பட இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனால்தான் அவ்வப்போது கோலிவுட்டில் சிறந்த திரைப்படங்கள் காணக் கிடைக்கின்றன. அவை சர்வதேச விருதுகளையும் தேசிய விருதுகளையும் தட்டிக்கொண்டு வருவதும் நிகழ்கின்றன. அப்படித்தான் நமக்கு ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ மற்றும் 'ரேடியோ பெட்டி’ போன்ற படங்கள் கிடைத்தன. இந்த இயக்கங்களின் முதன்மையான நோக்கம் என்பது, சினிமாவை ஆரோக்கியமான பாதையில் தொடர்ந்து முன்னெடுப்பது மட்டுமில்லை, தரமான ரசிகர்களை உருவாக்கவும் அவை முயற்சி எடுக்கின்றன. 

மலையாளத்தில் சிறந்த சினிமாக்கள் உருவாக, இவ்வகையான இயக்கங்கள் முக்கிய காரணம். அதில் ஒன்றுதான் ‘ஒடேஸா’. மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் ஜான் ஆபிரஹாம் உருவாக்கிய இந்த அமைப்பு, இப்போதும் செயல்பட்டு வருகிறது (யார் இந்த ஜான் என்று கேட்பவர்கள், தமிழின் மிக முக்கிய படங்களில் ஒன்றான அக்ரஹாரத்தில் கழுதை படத்தைப் பார்த்தால் போதும்)

அதுபோலவே, தமிழகத்திலும் சில சினிமா இயக்கங்கள் உண்டு. அவ்வாறு தீவிரமாகச் செயல்பட்டு வருபவற்றில் ஒன்று தமிழ் ஸ்டுடியோ இயக்கம். சிறந்த படங்களைத் திரையிடுதல், ரசிகர்களின் ரசனையை மேம்படுத்த பயிற்சி தருதல், குறும்படங்களை உருவாக்க பொருளாதார ரீதியாக உதவுதல், ஆளுமைகளும் வாசகர்களும் நேருக்கு நேர் சந்தித்து உரையாட களம் அமைத்தல், இளைய தலைமுறை படைப்பாளிகளை அடையாளம் கண்டு, மூத்த படைப்பாளிகளின் பெயரில் விருது வழங்கிக் கவுரவித்தல் எனப் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. 

அந்தவகையில், வருகிற ஆகஸ்ட் 20ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் லெனின் விருது வழங்கும் விழாவை நடத்துகிறது. இவ்விருதுக்கு, ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பங்கேற்க உள்ளார். பொதுவாக ஒரு இயக்கத்தை தொடர்ந்து நடத்துவதற்கு, பெரிய அளவில் பொருளாதார பலம் தேவைப்படும். இல்லையேல், மக்களிடம் நிதி திரட்டிதான் அதை நிகழ்த்த முடியும். அந்த வழியில், தமிழ் ஸ்டூடியோ இயக்கமும் மக்களிடம் நிதி திரட்டி இவ்விழாவை நடத்த உள்ளது. நல்ல சினிமாவை வரவேற்கும் ரசிகர்கள், வாசகர்கள் அவர்களுக்கு உதவலாம். விருப்பம் உள்ளவர்கள்  thamizhstudio@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles