30 லட்சம் ஹிட்ஸ் அள்ளிய ‘இருமுகன்’ ட்ரெய்லர்! - விக்ரம் ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Friday, August 5, 2016

சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொல்வதைப் போன்றது, இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் விக்ரம் அற்புதமாக நடித்திருக்கிறார் என்பது. தான் நடிக்கும் படங்கள் எல்லாவற்றிலும், தனது நடிப்பாற்றலில் ஏதாவது ஒரு வித்தியாசமான அம்சத்தைச் சேர்ப்பது விக்ரமின் வழக்கம். அதற்காகவே அவரது படத்தைப் பார்க்க, தியேட்டரில் கூட்டம் அள்ளும். அப்படியொரு அனுபவத்தை தரத் தயாராக இருக்கின்றனர் ‘இருமுகன்’ படக்குழுவினர். 

விக்ரம் மட்டுமல்லாமல், நயன்தாரா, நித்யாமேனன் என்று இரண்டு நடிப்பு ராட்சசிகளும் இந்தப் படத்தில் உண்டு. ஹாரிஸ் ஜெயராஜின் இசை, ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு என்று பல தொழில்நுட்ப சிறப்பம்சங்களும் இதில் இருக்கின்றன. புவன் சீனிவாசன் என்றொரு இளைஞர் இதற்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். இயக்குனர் மணிரத்னத்தின் பட்டறையைச் சேர்ந்தவர் இவர் என்கிறது இருமுகன் வட்டாரம். 

உலகையே அச்சுறுத்தும் ஒரு வில்லன் விஞ்ஞானியின் சவால், அதனை முறியடிக்கக் களமிறங்கும் நாயகன் மற்றும் நாயகி என்று படத்தின் கதையைப் புடம்போட்டுக் காட்டியிருக்கிறது ’இருமுகன்’ ட்ரெய்லர். இதையெல்லாம் மீறி, நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் படம் நெடுக இருக்கிறது என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கியிருக்கிறது. இதற்குக் காரணம், இந்தப் படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். ‘அரிமா நம்பி’ படத்தின் மூலமாக, இளைய தலைமுறையின் பல்ஸ் பிடித்தவர். இரண்டாவது முறையாக, நம்மை அசத்த ‘இருமுகன்’ தரப்போகிறார்.

டை ஹார்டு ‘ஜான் மெக்லின்’ , மிஷன் இம்பாஸிபிள் ‘ஏதன் ஹண்ட்’, பார்னே சுப்ரிமேசி ‘ஜேசன் பார்னே’ என்று அரை டஜன் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை ரசித்தவர்களுக்கு, இதுமாதிரியான படங்கள் தமிழில் வராதா என்று ஏக்கமுண்டு. அதனைத் தீர்த்து வைக்கும்விதமாக அமையப் போகிறது ‘இருமுகன்’. 30 லட்சத்திற்கும் அதிகமான ஹிட்களைப் பெற்றிருக்கும் ’இருமுகன்’ ட்ரெய்லர், அதனை அடிக்கோடிட்டு நிரூபித்திருக்கிறது.

- உதய் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles