'மாஸ் ப்ளஸ் கிளாஸ்' விஜய் சேதுபதி தர்மதுரை ஆடியோ வெளியீட்டு விழா கலாட்டா!

Thursday, August 4, 2016

சமூக சீர்திருத்தக் கருத்துகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் சரிவிகிதத்தில் நிறைந்த படங்கள் பெரிய வணிக வெற்றியைப் பெறும். தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட இயக்குனர்கள் அனைவருமே, இப்படிப்பட்ட படங்களை உருவாக்கியவர்கள்தான். நீர்ப்பறவை வெற்றியைத் தொடர்ந்து, அது போன்றதொரு படைப்பைத் தரக் காத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. 

தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நடித்ததன் மூலமாக, தமிழ் சினிமாவை ரசிப்பவர்களின் குட்புக்கில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. அந்தப் படத்திற்கு தேசிய விருது கிடைத்தபிறகு, இயக்குனர் சீனு ராமசாமியின் ஆக்கம் அனைவருக்கும் புரிந்தது. இதற்கடுத்து, இருவரும் இணைந்து பணிபுரிந்த ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் வெளியீடு, சில காரணங்களால் தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், இவர்கள் மூன்றாம் முறையாக இணைந்துள்ள ‘தர்மதுரை’ படத்தினை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. 

காம்பினேஷன் என்ற வார்த்தை, சினிமா உலகில் வெகு பிரபலம். ஏற்கனவே ஒரு வெற்றிப்படத்தில் கைகோர்த்தவர்கள் மீண்டும் இணையும்போதோ அல்லது சம்பந்தமில்லாத வெற்றிக்கலைஞர்கள் கூட்டணி அமைக்கும்போதோ, இந்த காம்பினேஷன் பற்றிய பேச்சு வைரலாகப் பரவும். ’தர்மதுரை’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, அப்படியொரு பேச்சுக்கு ‘கமா’ போட்டிருக்கிறது. 

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் நடிகை தமன்னா. இவரைத் தவிர, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே என்று இன்னும் இரண்டு ஹீரோயின்கள் இருக்கின்றனர். தாரை தப்பட்டையில் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ், இந்தப் படத்தின் தயாரிப்பாளர். இன்னொரு முக்கியமான விஷயம், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைத்து, பாடல்கள் தந்திருக்கிறார் கவியரசு வைரமுத்து. இப்படி பல வித்தியாசமான காம்பினேஷன்களைத் தன்னுள் அடக்கியிருக்கிறது தர்மதுரை. 

கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ஒரு படத்தில் பணிபுரிந்தவர்களிடம் தென்படும் திருப்தி, அதனைத் திரையில் கண்டு ரசிப்பவர்களிடம் பன்மடங்காக இருக்கும் என்பதற்கான முன்னோட்டம். விஜய் சேதுபதியின் தர்மதுரை ஆடியோ வெளியீட்டிலும் இது நிகழ்ந்திருக்கிறது. இதே வேகத்துடன், விரைவில் திரைக்கு வரப்போகிறது இந்தத் திரைப்படம். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ’மாஸ் ப்ளஸ் கிளாஸ்’ திரைப்படங்களில் முதன்மையாக இருப்பது ‘தர்மதுரை’. தற்போது அதே தலைப்பில் வெளியாகப் போகிறது, விஜய் சேதுபதியின் தர்மதுரை. இதுவும் அது போல அமையுமா? காத்திருப்போம்..!

- உதய் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles