24 ஆண்டுகள்.. 57வது படம்.. கலக்கும் ‘தல’ அஜித்குமார்

Monday, August 1, 2016

தமிழ்சினிமாவில் ‘தல’ அஜித் கால்பதித்து, 24 ஆண்டுகள் ஆகிறது. இதுதான், தற்போது நெட்டுலகைக் கலக்கிவரும் முக்கியமான விஷயம்.

’தல’ என்று பேச்சைத் தொடங்கினாலே, அஜித்குமாரின் வாழ்க்கையை விவரிக்கத் தயாராக இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். அவர்களைப் பொறுத்தவரை, அஜித்தின் ஒவ்வொரு அசைவும் முக்கியம். அதுபற்றிய தகவல்கள் மற்றும் தரவுகளைத் திரட்டுவது, அடிப்படைத் தேவைகளில் ஒன்று. இப்படியொரு அன்பையும் ஆதரவையும் பெறுவது சாதாரண விஷயமில்லை. 

தான் கடந்துவந்த 24 ஆண்டுகால அனுபவங்களின் மூலமாக, அதனைச் சாதித்திருக்கிறார் அஜித். பில்லா 2 படத்தில் வருவதுபோலச் சொல்வதாக இருந்தால், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும்.. அவரே செதுக்கியது. 

 

கொல்லபுடி சீனிவாஸ் இயக்கிய ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலமாக அறிமுகமானவர் அஜித்குமார். விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பின்போது, கடலலைக்குள் சிக்கி இறந்துபோனார் அதன் இயக்குனர். அதன்பின், ஒருவழியாக அந்தப்படம் வெளியானது. ‘அமராவதி’ என்ற படத்தில் நடித்ததன் மூலமாக, தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதன்பிறகு, அரை டஜன் படங்களில் கவுரமாகத் தலைகாட்டியிருக்கிறார் அஜித். இந்த காலகட்டத்தில் தான், ஒரு விபத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு, புத்துணர்வுடன் அவர் நடித்த ஆசை, வான்மதி, காதல்கோட்டை என்று வரிசையாக ஹிட்கள் தொடர்ந்தாலும், அவருக்கென்று தனித்த அடையாளம் கிட்டவில்லை. இடைப்பட்ட காலத்தில், பல சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கிறார்அஜித். அதைப்பற்றிய தகவல்களை, அவர் என்றுமே பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டதில்லை. இதுபோன்ற தடைகளில் இருந்து மீண்டு, ஒரு கதாநாயகனாகப் புகழ்பெறுவது கண்டிப்பாகச் சாதனைதான். 

 

2000களில் காதல் மன்னன், உன்னைத்தேடி, வாலி என்று மெதுமெதுவாக ஏறிய அஜித்தின் கிராப், அமர்க்களம், சிட்டிசன் என்று உச்சம் தொட்டது. அதற்குப் பின்னும், அவரது படங்கள் தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், அந்தத் தோல்விப்படங்கள் கூட, அவரைப் பொறுத்தவரை வெற்றிப்படங்கள் தான். அந்தந்தப் படங்களின் பெயர்களைத் தாங்கியவாறு, தமிழகம் முழுக்க நிரம்பியிருக்கும் அஜித் ரசிகர் மன்றங்களைப் பார்த்தால், இந்த உண்மை புரியவரும். 

 

மாஸ் நாயகர்களுக்கு ரசிகர் மன்றங்களே பக்கபலம் என்று நம்புவது கோடம்பாக்கத்து வழக்கம். அதனையும் உடைத்தெறிந்தவர் அஜித்குமார். தனது ரசிகர்கள் மீது அரசியல் சாயம் பூசுவதை வீசாமல், அனைத்து மன்றங்களையும் கலைத்துவிட்டதாக அறிவித்தார். அதற்குப்பின் வெளியானது, அஜித்தின் 50 வது திரைப்படமான ‘மங்காத்தா’. ரசிகர்களின் மனதில் இருந்து அஜித்தின் பிம்பத்தைக் கலைத்துவிட முடியாது என்பது, அப்போது நிரூபணமானது. 

 

குறைவான மேக்கப், ஒரிஜினல் கெட்டப் மட்டுமல்லாது, கமர்ஷியல் சினிமா இலக்கணங்களின் வரையறைகளை அவ்வப்போது உடைப்பார் அஜித். பின்பு, அதுவே ட்ரெண்ட் ஆகும். அந்த வரிசையில், படத்தின் தலைப்பை அறிவிக்காவிட்டாலும், ரசிகர்களுக்குத் தனது புதிய படம் பற்றிய எதிர்பார்ப்பு குறையாது என்ற உண்மையைப் புரியவைத்திருக்கிறார் ’தல’. பல்கேரியாவிற்குச் செல்வதற்காக விமானநிலையம் சென்ற அவருடன், அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுத்ததும், அவை எல்லாம் #தல 57 என்று ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருப்பதும், இதனைப் பறைசாற்றுகின்றன. 

 

அஜித் கடந்து வந்த 24 ஆண்டுகளே, அவரைத் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சாதனையாளராக மாற்றியிருக்கிறது. அந்த அனுபவத்தை உள்வாங்குவோம்! அவரது படங்களை ரசிப்போம்!!

- பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles